நீங்கள் கழிவறையைப் பயன்படுத்தும்போது எப்போதாவது உங்கள் சிறுநீர் இளஞ்சிவப்பு நிறத்தில் வருவதை பார்த்திருக்கிறீர்களா? அது சிறுநீரில் இரத்தம் கலந்து வருவதற்கான அறிகுறியாக இருக்கலாம் மேலும் தீவிர உடல்நலப் பிரச்சனைகள் இருப்பதன் வெளிப்பாடாக இருக்கலாம்.
ஆரோக்கியமான நபரின் சிறுநீர் அவருடைய உடல் நீரேற்றத்தின் அடிப்படையில் தௌ்ளத் தௌிவான நிறம் முதல் அடர் மஞ்சள் நிறம் வரை இருக்கும். இளஞ்சிவப்பு, சிவப்பு அல்லது பழுப்பு நிறத்தில் சிறுநீர் வருவது சிறுநீரில் இரத்தம் கலந்து வருவதைக் குறிக்கலாம், அது ஹெமாட்டூரியா (சிறுநீரில் இரத்தம் கலந்து வருதல்) என்று அழைக்கப்படுகிறது.
அது உங்களைக் கவலையடையச் செய்யலாம். அதனால்தான், ஆண்களுக்கும் பெண்களுக்கும் சிறுநீரில் இரத்தம் கலந்து வருவதற்கான பொதுவான காரணங்கள் மற்றும் அதற்கான சிகிச்சைகள் உட்பட நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தையும் நாங்கள் தொகுத்துள்ளோம்.
ஆண்களுக்குச் சிறுநீரில் இரத்தம் கலந்து வரக் காரணங்கள்
ஆண்களைப் பொறுத்தவரைச் சிறுநீரில் இரத்தம் கலந்து வரக் காரணங்கள் பல இருக்கின்றன. இவற்றில் சில பாதிப்பில்லாதவை என்றாலும், மற்றவை கவலைக்குரியவை. வெவ்வேறு அடிப்படை பாதிப்புகளைப் புரிந்துகொள்வது சரியான தகவலுடன் உரிய நேரத்தில் மருத்துவ உதவி பெற உங்களுக்கு உதவும்.
பின்வருவன சில பொதுவான காரணங்கள்:
சிறுநீரகக் கற்கள் - இரு பாலினருக்கும் சிறுநீரில் இரத்தம் கலந்து வருவதற்குச் சிறுநீரகக் கற்கள் காரணமாக இருக்கலாம் என்றாலும், ஆண்களுக்கு இந்த பாதிப்பு அதிகமாக ஏற்படுகிறது. சிறுநீரகக் கற்கள் வெளியேறும்போது ஏற்படும் லேசான காயத்தினால் எரிச்சல் மற்றும் வீக்கம் ஏற்படுகிறது, அதனால் சிறுநீரில் இரத்தம் கலந்து வருகிறது.
புற்றுநோயல்லாத விந்து சுரப்பி வீக்கம் (BPH)
எளிமையாகச் சொல்ல வேண்டுமென்றால், BPH விந்து சுரப்பி விரிவாக்கத்தைக் குறிக்கிறது. அது இடுப்பு பகுதியில் வலியை ஏற்படுத்துகிறது மற்றும் சிறுநீர் கழிப்பதில் சிரமம் மற்றும் தொற்றுநோய்களை ஏற்படுத்தும், இதன் விளைவாக ஹெமாட்டூரியா ஏற்படுகிறது.
விந்து சுரப்பி அழற்சி
இது விந்து சுரப்பியில் ஏற்படும் எரிச்சல் மற்றும் வீக்கத்தைக் குறிக்கிறது, அது நோய்த்தொற்று மற்றும் சிறுநீர் ஓட்டத்தில் தடைகளை ஏற்படுத்தும், இதன் விளைவாக ஆண்களுக்குச் சிறுநீரில் இரத்தம் கலந்து வருகிறது.
காயம்
சிறுநீரகம், சிறுநீர்ப் பை அல்லது சிறுநீர்குழாய் ஆகியவற்றில் ஏற்படும் காயத்தினால், சிறுநீரில் இரத்தம் கலந்து வருகிறது, அது ஹெமாட்டூரியா பாதிப்பு என அழைக்கப்படுகிறது. காயத்தின் அளவைப் பொறுத்து, சிறு காயம் ஏற்பட்டிருந்தால் மிகவும் இளஞ்சிவப்பு நிறத்தில் அல்லது அதிக இரத்தபோக்கு ஏற்பட்டிருந்தால் அடர் சிவப்பு-பழுப்பு நிறத்தில் சிறுநீர் வரலாம்.
பெண்களுக்குச் சிறுநீரில் இரத்தம் கலந்து வருவதற்கான காரணங்கள்
ஒரு பெண்ணின் உடல் மிகவும் சிக்கலானது மற்றும் வாழ்க்கையின் வெவ்வேறு கட்டங்களில் பல மாற்றங்களுக்கு உட்படுகிறது. உடலில் மாதம் முழுவதும் ஹார்மோன் அளவில் ஏற்ற இறக்கங்கள் ஏற்படுகிறது. அதனால் பெண்களுக்கு சிறுநீரில் இரத்தம் கலந்து வரும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. பின்வருவன இதற்கான சில பொதுவான காரணங்கள்:
ஹார்மோன் மாற்றங்கள்
கர்ப்பகாலம் அல்லது மாதவிடாய் நிறுத்தத்திற்குப் பிறகு ஒரு பெண்ணின் உடலில் விரைவான ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படும். உடலில் ஏற்படும் இந்த திடீர் மாற்றங்கள், சில நேரங்களில், சிறுநீர் பாதை சுவர்களைப் பாதிக்கலாம், அதன் விளைவாகச் சிறுநீரில் இரத்தம் கலந்து வருகிறது.
சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகள் (UTI -கள்)
பெண்களுக்கு UTI பாதிப்புகள் அதிகமாக ஏற்படுவதால், அவர்களுக்கு ஹெமாட்டூரியா பாதிப்பு ஏற்படுவதற்கான மிகவும் பொதுவான காரணங்களில் ஒன்றாக இது இருக்கிறது. இந்த நோய்த்தொற்றுகள் சிறுநீர்ப் பையில் எரிச்சல் மற்றும் வீக்கத்தை ஏற்படுத்தும், அதனால் சிறுநீரில் இரத்தம் கலந்து வருகிறது. மருத்துவரிடம் சரியான நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகளைப் பெறுவது சில நாட்களுக்குள் அந்த பாதிப்பைத் தீர்க்க உதவும். இந்த வலைப்பதிவில் சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகள் பற்றி மேலும் அறியலாம்.
பாலியல் ரீதியாகப் பரவும் நோய்கள் (STD -கள்)
கிளமிடியா மற்றும் கோனோரியா போன்ற STD -கள் சிறுநீர்ப் பையில் எரிச்சலை ஏற்படுத்தும் அதனால் சிறுநீரில் இரத்தம் கலந்து வருகிறது.
பாலியல் செயல்பாடு
தீவிர பாலியல் செயல்பாடு காரணமாக ஏற்படும் மிக நுண்ணிய கிழிசல்களும் சிறுநீரில் இரத்தம் கலந்து வரக் காரணமாக இருக்கும். இத்தகைய காயங்கள் பொதுவாக மிகச் சிறியவை மற்றும் சில நாட்களுக்குள் அவை தானாகவே குணமடைந்துவிடும்.
சிறுநீரில் இரத்தம் கலந்து வருவதற்கு எப்படி சிகிச்சை அளிப்பது
பின்வருவன சிறுநீரில் இரத்தம் கலந்து வருவதைக் குணப்படுத்த சில பொதுவான சிகிச்சைகள், அவற்றை நீங்கள் முயற்சி செய்யலாம்:
போதிய அளவு தண்ணீர் குடிப்பது
போதிய அளவு தண்ணீர் குடிப்பது எந்த அடிப்படை பாதிப்பையும் குணப்படுத்தாது என்றாலும், UTI காரணமாக ஹெமாட்டூரியா பாதிப்பு ஏற்பட்டால் அந்த பாதிப்பை விரைவாகக் குணப்படுத்த உதவும்.
கிரான்பெர்ரிகளை உட்கொள்வது
கிரான்பெர்ரியில் புரோந்தோசயனிடின்கள் (PAC) எனப்படும் இரசாயனம் அதிகமாக இருக்கிறது, அது சிறுநீர்ப் பையின் சுவர்களில் பாக்டீரியாக்கள் ஒட்டிக்கொள்வதைத் தடுக்கிறது, மேலும் நோய்த்தொற்றுகளால் ஏற்படும் ஹெமாட்டூரியா பாதிப்பை விரைவாக எதிர்த்து போராடுகிறது.
அன்னாசி பழச்சாறு குடிப்பது
அன்னாசி பழச்சாற்றில் புரோமெலின் என்ற நொதி இருக்கிறது, அது அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது மற்றும் சிறுநீரில் இரத்தம் கலந்து வரும்போது ஏற்படும் மிதமான சிறுநீர் பாதை எரிச்சலைக் குறைக்கும்.
மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது
சிறுநீரில் இரத்தம் கலந்து வரும்போது காய்ச்சல் அல்லது இடுப்பு பகுதியில் வலி போன்ற பிற அறிகுறிகள் ஏற்பட்டால், அதற்கு சிகிச்சை பெற மருத்துவரை அணுகுவது நல்லது. பாதிப்பின் அடிப்படைக் காரணத்தைப் பொறுத்து, நோய்த்தொற்றுகளுக்கான நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள் அல்லது வலிக்கான வலி நிவாரணி மருந்துகளை அவர்கள் பரிந்துரைக்கலாம்.
முடிவுரை
உங்கள் சிறுநீரில் இரத்தம் கலந்து வருவது சந்தேகமில்லாமல் பயப்படக்கூடிய ஒன்றுதான். இருப்பினும், அது எப்போதும் கவலைக்குரியதாக இருக்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியாக வீட்டில் பாட்டி வைத்தியங்கள் சிலவற்றை முயற்சிக்கவும், மேலும் சரியான வழிகாட்டுதலுக்கு ஒரு மருத்துவரை அணுகவும்.
Product Recommendations
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
1. என் சிறுநீரில் இரத்தம் கலந்து வருவது எதைக் குறிக்கிறது?
உங்கள் சிறுநீரில் இரத்தம் கலந்து வருவது, சிறுநீர் பாதை நோய்த்தொற்று (UTI), சிறுநீரக கற்கள் அல்லது காயம் போன்ற அடிப்படை மருத்துவ பாதிப்புகளைக் குறிக்கலாம். பிரச்சனையின் காரணத்தைக் கண்டறிந்து சிகிச்சை பெற மருத்துவரை அணுகவும்.
2. சிறுநீரில் இரத்தம் கலந்து வருவது அவசரமாகக் கவனிக்கப்பட வேண்டிய ஒன்றா?
சிறுநீரில் இரத்தம் கலந்து வருவது, அதன் அடிப்படைக் காரணத்தை பொறுத்து அவசரமாக மருத்துவச் சிகிச்சை பெற வேண்டிய அவசியமில்லை. பாதிப்பின் தீவிரத்தை தீர்மானிக்க இடுப்பு பகுதியில் வலி அல்லது காய்ச்சல் போன்ற கூடுதல் அறிகுறிகள் ஏற்படுகிறதா எனப் பார்க்கவும்.
3. தண்ணீர் குடிப்பதால் சிறுநீரில் இரத்தம் கலந்து வருவது நிற்குமா?
தண்ணீர் குடிப்பது சிறுநீர் நீர்த்துப்போக உதவலாம். நோய்த்தொற்று காரணமாக உங்களுக்கு ஹெமாட்டூரியா பாதிப்பு ஏற்பட்டிருந்தால், அது தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை வெளியேற்றி, குணமடைவதைத் துரிதப்படுத்தும். இருப்பினும், தண்ணீர் குடிப்பது அந்தப் பிரச்சனைக்குத் தீர்வாகாது, ஏனெனில் அது அடிப்படை காரணத்தைக் குணப்படுத்தாது.
4. சிறுநீரில் இரத்தம் கலந்து வருவது தானாகவே குணமாகுமா?
சில சந்தர்ப்பங்களில், சிறுநீரில் இரத்தம் கலந்து வருவது சில மணிநேரங்கள் அல்லது நாட்களுக்குப் பிறகு தானாகவே சரியாகிவிடும். காயம் அல்லது தீவிர உடற்பயிற்சி காரணமாக ஹெமாட்டூரியா பாதிப்பு ஏற்படும்போது அவ்வாறு பொதுவாக நிகழ்கிறது. இருப்பினும், அடிக்கடி அல்லது தொடர்ந்து சிறுநீரில் இரத்தம் கலந்து வருவது கவலைக்குரியது மற்றும் அதற்கு மருத்துவச் சிகிச்சை பெற வேண்டும்.
5. எந்த பாட்டி வைத்தியம் சிறுநீரில் இரத்தம் கலந்து வருவதை குணப்படுத்துகிறது?
போதிய அளவு தண்ணீர் குடிப்பது, கிரான்பெர்ரிகள் சாப்பிடுவது மற்றும் அன்னாசி பழச்சாறு குடிப்பது போன்ற பாட்டி வைத்தியங்கள் மிதமான ஹெமாட்டூரியா பாதிப்புகளைக் குணப்படுத்த உதவலாம்.